விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எரிச்சநத்தம் கிராமத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் அப்துல் கலாமின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து எரிச்சநத்தம் மாசாணியம்மன் கோயில் அருகேயுள்ள கண்மாய் கரையில் அரசு தோட்டக்கலைத்துறை உதவியுடன் 7 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.
இதன்மூலம் இனிவரும் மழைக்காலங்களில் கண்மாய் கரை மழையில் அடித்துச் செல்லாமல் பாதுகாக்க முடியும் என்றும் வெயில் காலங்களில் கண்மாயில் நீர் இருப்பு அதிகரிக்கும் எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இளைஞர்கள் இவ்வாறு மர விதைகளை நடவு செய்ய ஊக்குவிப்பதன் மூலம் மரங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என்றும் எதிர்காலங்களில் வறட்சி இல்லாமல் இயற்கையான சூழலை பெற முடியும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஊர் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.