தமிழ்நாடு முழுவதிலும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில் வசிக்கும் யானைகளுக்கு வருடம் தோறும் 48 நாள்கள் புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம்.
அதனடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் தேதி கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமிற்கு, ஸ்ரீ ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா அழைத்து செல்லப்பட்டது.
தேக்கம்பட்டியில் நடைபெற்ற புத்துணர்வு முகாமில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 50க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்றன. முகாமில் பங்கேற்ற யானைகளுக்கு நடைபயிற்சி, பக்தர்களிடம் அணுகும் முறை உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் யானைகளின் உடல் நலத்திற்காக மூலிகை உணவுகளும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த யானை, மங்காபுரம் பள்ளி மைதானத்தில் வைத்து இறக்கப்பட்டு தொடர்ந்து ஊர்வலமாக ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. முகாம் முடித்து திரும்பிய யானைக்கு பக்தர்கள் ஆரத்தி எடுத்தும், வாழைப்பழம் கொடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையும் படிங்க: திருவாரூர் டூ தஞ்சாவூர்: அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்