கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றுவருகிறது. இதில், இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் யானைகள், தனியார் மடங்களுக்குச் சொந்தமான யானைகள் என 26 யானைகள் பங்கேற்றன.
தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் பிப்ரவரி 21ஆம் தேதி கடந்த சில நாள்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவைத் தாக்கியதாக பாகன்கள் ராஜா என்ற வினில்குமார், சிவபிரசாத் ஆகியோரை தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் மேலாண்மைப் பராமரிப்பு விதியின்கீழ் மேட்டுப்பாளையம் வனத் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், பாகன் வினில் குமாரை இந்து அறநிலைத் துறை பணியிடை நீக்கம் செய்தது.
யானை ஜெயமால்யதாவை கவனிக்க ஆள்கள் இல்லாததால் மீண்டும் யானையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு கொண்டுசெல்ல இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, முகாமிலிருந்த யானை ஜெயமால்யதா அறநிலையத் துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவக் குழுவினர் முன்னிலையில் லாரியில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த யானை பாதுகாப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்தடைந்தது. கோயில் நிர்வாம் சார்பில் யானைக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்து வரவேற்பளித்தனர்.
இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை மீது தாக்குதல்: இருவர் கைது!