விருதுநகர்: சாத்தூர் தொகுதி திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "சாத்தூர் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன். அப்போது அனைவரும் கூறிய ஒரே பிரச்சினை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பத்து நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனர். மேலும் பல்வேறு கிராமப் பகுதிகளில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை என்றும் கூறினர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் எந்தப் பிரச்சனைகளையும் கண்டுகொள்ளவில்லை. மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நல்லாட்சி அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்" என்று தெரிவித்தார்.