விருதுநகர் அருகே வெள்ளூர், கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் குருநாதன் ( 33), டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அதிகாலை 1 மணியளவில் மதுரைக்கு சவாரி செல்வதற்காக குருநாதன் தனது டாடா சுமோ காரில் புறப்பட்டார். அப்போது எரிச்சநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியாகியுள்ளது. தீப்பிடித்ததை அறிந்த குருநாதன், உடனடியாக காரிலிருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார்.
ஆனால், காரின் கதவுகளை திறக்க முடியாததால், செல்போன் மூலம் தனது தந்தை முனியாண்டியை தொடர்பு கொண்டு கார் தீ விபத்துக்குள்ளானதும், தான் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உடனே அவரது தந்தை முனியாண்டி ஆட்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமாகியிருந்தது. காருக்குள் குருநாதன் தீயில் கருகி இறந்த கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆமத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்