விருதுநகர்: ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில், தற்போதைய திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன், மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று (மார்ச்.15) திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கக்கூடிய தங்கபாண்டியன், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது 'நான் மண்ணின் மைந்தன். எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்' என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் 'நூறு நாள் வேலைத்திட்டத்தை ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் 150 நாட்களாக மாற்றுவதுடன் 300 ரூபாய் சம்பளமாக உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும். நீங்கள் வேலைக்குச் செல்லாமல், மண் வெட்டாமல் கூட சம்பளம் பெற்றுக் கொள்ளலாம்' எனப் பேசினார்.
இதையடுத்து தேவதானம் மற்றும் வடக்கு தேவதானம் பகுதியில் பரப்புரைக்காக, 15-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் உயர் மின் கம்பியிலிருந்து, கொக்கி போட்டு மின்சாரம் திருடி எரியவைக்கப்பட்டிருந்தது.
மேலும் 'இப்பரப்புரையில், தேர்தல் அதிகாரி கண்ணில் மண்ணைத் தூவி மின்சார திருட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுரங்கப்பாதை பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து