இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்றுள்ள கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கரோனா தொற்று காரணத்தினால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 2 ஆயிரத்து 370 வாக்குச்சாவடிகளாக உள்ளன. மேலும், வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 370 தெர்மல் ஸ்கேனர், 14 ஆயிரத்து 220 (500மிலி), 26 ஆயிரத்து 070 (100மிலி) கிருமிநாசினிகள், 26 ஆயிரத்து 070 முகக்கவசங்கள், 1 லட்சத்து 56 ஆயிரத்து 420 மூன்றடுக்கு முககவசங்கள், 71 ஆயிரத்து 100 ஈரடுக்கு முகக்கவசங்கள், 78 ஆயிரத்து 210 கையுறைகள், 18 லட்சத்து 96 ஆயிரம் பாலித்தீன் கையுறைகள், 30 ஆயிரத்து 810 முழு உடை கவசம் (PPE Kit) ஆகிய உபகரணங்கள் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வாக்குச்சாவடி வாரியாக தேவைப்படும் கரோனோ பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கரோனா பாதுகாப்பு உபகரணங்களை தனித்தனியாக பிரித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைத்திட ஏதுவாக செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை கொண்டு பணிகள் நடக்கின்றன. இப்பணியினை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கண்ணன் பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் சட்டப்பேரவை தேர்தலை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக நிர்வாகியின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி!