விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் ஆண்டிச்சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமி வழிபாடு செய்வதற்கு பெரிய அம்பலம் - சின்ன அம்பலம் ஆகிய இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக சாமி வழிபாடு செய்ய வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் இரு தரப்பினரும் விட்டுக்குக் கொடுத்து ஒருமுறை ஒரு தரப்பினரும் அடுத்தமுறை மற்றொரு தரப்பினரும் என மாறி மாறி சாமி வழிபாடு செய்ய வேண்டும் என வருவாய்த் துறை அலுவலர் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி ஒரு தரப்பினர் சாமி வழிபாடு செய்ய வந்தபோது மற்றொரு தரப்பினர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் அருப்புக்கோட்டை ஆய்வாளர் அன்னராஜ், காரியாபட்டி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.