திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்து இருக்கின்றன. வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள். அரசு தேர்வுகள் இயக்ககம் பொதுத்தேர்வு குறித்து பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் சேர்ந்து அவற்றின் வாயிலாக இறுதிப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி 2017ஆம் ஆண்டில் 8.93 லட்சமாக இருந்த தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 2020 ஆம் ஆண்டில் 7.79 லட்சமாகக் குறைந்திருக்கின்றது. அதாவது, ஏறத்தாழ 1.14 லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாகக் கடந்த மூன்று தேர்வுகளில் குறைந்து வந்திருக்கின்றார்கள்.
இவ்வளவு பெரிய சரிவு தொடர்ச்சியாக ஏற்பட என்ன காரணம்? பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் முன்னர், இடை நிற்றல் (Drop out) அதிகரித்து விட்டதா? அல்லது பதினொன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருமே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதாமல், பலர் பாதியில் படிப்பைத் தொடராமலோ, தேர்வு எழுதாமலோ நின்று விடுகின்றார்களா?.
இவர்களில் மிகப்பலர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருந்திருக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றது? இவற்றை விளக்க வேண்டியது அரசின் கடமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.