விருதுநகரில் அதிமுக சார்பில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி அதிமுக. அதிமுகவில் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சியைக் கைப்பற்றினால் தான் மக்களுக்குத் தொண்டாற்ற முடியும். உள்ளாட்சியில் வெற்றி பெற்று பதவி பெற்றால் அடிப்படை தொண்டர்கள், மக்களுக்கு நல்லது செய்ய முடியும். திமுக கட்சி அழிந்து வருகிறது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அவர்கள் வேட்பாளர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
திமுகவினர் காட்டில் கூட்டம் போடுபவர்கள். அதிமுகவினர் நாட்டுக்குள் கூட்டம் போடுபவர்கள் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை அச்சுறுத்துபவர்கள் நிம்மதியாக வாழ முடியாது. விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி தந்த முதலமைச்சரின் சாதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 444 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் பற்றி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்” என்று பேசினார்.