விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜசேகர், தனது ஊரைச் சேர்ந்த கல்லூரி பெண்கள், குடும்பத் தலைவிகளின் புகைப்படங்கள் ஆபாச வார்த்தைகளுடன் சமூக வளைதளப் பக்கமான ட்விட்டரில் காணப்படுவதாக, மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறையினர், புகார் தெரிவிக்கப்பட்ட ட்விட்டர் ஐடியைக் கொண்டு விஜி என்ற வீரபுத்திரனின் செல்போன் நம்பரை கண்காணித்து வந்துள்ளனர். இதில் விஜி (எ) வீர புத்திரன் தொடர்ந்து குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாச வார்த்தைகளுடன் ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்நபர் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குச் சென்று அவரைக் கைது செய்த காவல் துறையினர், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக மேட்டமலையில் உள்ள அவரது வீட்டின் முன்பு கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் குவிந்ததால் அவரது வீட்டின் முன்பு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹேக்கர்கள் மிரட்டுகிறார்கள்... குமரியில் புகார்