சத்தமில்லாமல் வானத்தை மிக அழகாய் பூப்பூவாய் வண்ணமயமாக்கும் பட்டாசுகளும் சரி. டமால், டுமீல் ஓசைகளால் காதை கிழிக்கும் பட்டாசுகளாக இருந்தாலும் இவர்களுக்கு நிகர் இங்கு எவருமில்லை. ஆனால், தற்போது அவர்களது கதையைக் கேட்டால் கல்நெஞ்சக்காரர்களும் கரைந்து போவார்கள். தீப்பெட்டித் தொழிலும், அச்சுத் தொழிலும் நிறைந்த குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
இறப்பு, பிறப்பு, அரசியல், திருவிழா, கொண்டாட்டம், அனைத்து நிகழ்வுகளுக்கும் இங்கு வாழும் மக்களின் உழைப்பு இல்லாமல் சிறிய ரக சீனி வெடிகூட வாங்க முடியாது. அவர்களின் உழைப்பு அளப்பறியது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் தினசரி வேலைக்குச் செல்லும் ஆண்களும், பெண்களும் அதிகமாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதரமாக மாறிப்போன பட்டாசுத் தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளதால் அவர்களது அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
சின்னத் தீக்குச்சியில் வரும் ஒளிக்குப் பின்னால், இம்மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது என்பதே நிதர்சனம். ஒரு பக்கத்தில் எழுதி முடிக்கக் கூடிய சிறுகதை அல்ல இவர்களது வாழ்க்கை முறை. தாய், தந்தையின் அன்பு இருக்கிறது, வறுமையில் வாடும் பசிக்கொடுமையும் இருக்கிறது. அது பற்றிய சிறிய பார்வை...
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இதில், சிவகாசி பட்டாசுத் தொழிலும் விதிவிலக்கல்ல.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு பசுமை பட்டாசு பிரச்னை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து மூன்று மாத காலம் பட்டாசு உற்பத்தி இல்லாமல் விற்பனையாளர்களும், தொழிலாளர்களும் மிகப்பெரிய வாழ்வாதார பிரச்னையை சந்தித்தனர். தங்களது சொந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுக்க முடியாதோ என்று கூறி தாய்மார்கள் கண் கலங்கிய காட்சியும் வந்து செல்கின்றன.
தற்போது முழு அடைப்பு காரணமாக பட்டாசுத் தொழில் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. வாரக் கூலிகளாகவும், தினக்கூலிகளாகவும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு நாளை கடந்து செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர். அரசு வழங்கும் 1000 ரூபாய் நிவாரணத் தொகை தங்களது குடும்பச் செலவுக்குப் போதவில்லை என்கிறார்கள் பட்டாசுத் தொழிலாளர்கள்.
ஊரடங்கு உத்தரவு மற்றும் தொழில் முடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1000 ரூபாய் அனைத்து வகை பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதோடு பட்டாசு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என் பட்டாசுத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: இன்றைக்குள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகம்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்