தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் சட்டென்று நினைவிற்கு வருவது பட்டாசுதான். இந்தியாவின் 90 விழுக்காடு பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளியை ஒளிரூட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெடித்து மகிழும் மத்தாப்புகள் முதல் வானில் வர்ண ஜாலங்களை தரும் ஃபேன்சி ரக பட்டாசுகள் வரை சுமார் 400 வகையான பட்டாசுகள் சிவகாசியில் உள்ள 1,100 பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த பணியில் சுமார் 3 லட்சம் தொழிலாளர் நேரடியாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக ஆண்டிற்கு 4 முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். சீன பட்டாசுகளின் ஊடுருவல், 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி விதிப்பு, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பு உள்ளிட்ட நெருக்கடியால் கடந்த 4 ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி சுமார் 50 விழுக்காடு குறைந்து சுமார் 2,500 கோடி ரூபாய் அளவில் மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடியை சந்தித்து வரும் பட்டாசு உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டு நம்பிக்கையுடன் பட்டாசு உற்பத்தியை தொடங்கினர். ஆனால், இந்த கரோனா ஊரடங்கு அவர்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. ஊரடங்கினால், சுமார் 100 நாட்கள் முடங்கிய பட்டாசு தொழில் 50 விழுக்காடு ஊழியர்களுடன் சில வாரங்களுக்கு முன்பு வேகம் எடுத்தது. தற்போது, அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் படி 100 விழுக்காடு ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டாலும், போதிய ஆர்டர்கள் வராததால் பட்டாசு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.
தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வரத்தொடங்கிவிடும் எனக் கூறும் பட்டாசு உற்பத்தியாளர்கள், இந்தாண்டு வெளிமாநில ஆர்டர்களே வரவில்லை என்கின்றனர். மேலும், உற்பத்தி செய்து வைத்துள்ள பட்டாசுகள் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதால் உற்பத்தியை சரிபாதியாக குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பட்டாசு தடைக்கு மறுபரிசீலனை - ராஜஸ்தான் முதலமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் கோரிக்கை