தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவிவருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் அதன் தாக்கம் நீடித்துவருகிறது. அதைத் தடுக்க தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் வங்கியில் பணியாற்றும் ஊழியர் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் வங்கி முழுவதும் சாத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் வங்கி செயல்படும் என வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.