காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பூ கடந்த சில மாதங்களாக கட்சிக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தார். மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டது; கரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நலம் பெற வாழ்த்து கூறியது, அதிமுக முதலமைச்சர் வேட்பாளரான முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாழ்த்து கூறியது என பாஜக, அதன் கூட்டணி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்த குஷ்பூ பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்து வந்த குஷ்பூ நேற்று முன்தினம் திடீரென டெல்லி புறப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பூவை நீக்கி கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. குஷ்பூவும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
நேற்று காலை(அக்.12) பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூவுக்கு இன்று சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'பாஜகவில் மகிழ்ச்சியாக இணைந்துள்ளேன். எல். முருகனின் முயற்சியால்தான் நான் பாஜகவில் இணைந்தேன். நான் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், காங்கிரஸ் தலைவர் ஒருவர் குஷ்பூவை நடிகையாக தான் கட்சி நிர்வாகிகள் பார்த்தார்கள் என்று கூறியுள்ளார்.
ஆறுவருடம் காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பைச் செலுத்தினேன். இப்போதுதான் அவருக்குத் தெரிகிறதா? நான் நடிகை என்று. மூளை வளர்ச்சியே இல்லாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கும் மரியாதை இல்லை, வெளியே போகிறவர்களுக்கும் மரியாதை இல்லை. காங்கிரஸ் என்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நிச்சயம் பதிலளிப்பேன்" என்றார்.
தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக அலுவலகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின்போது அனைத்து கேள்விக்கும் பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வதந்திகள் எனக்குப் பழகிவிட்டன - குஷ்பூ