விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்யக்கோரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவது விவசாயிகளை மட்டுமின்றி, சாமானியர்களையும் பாதிக்கும் திட்டம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்டத்தையாவது கட்டாயமாக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. மின்சாரத்தை தனியார் மயமாக மாற்றினால், ஒவ்வொரு வீட்டின் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் உள்ளது. மின்சாரத் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு துடிப்பதை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசு இலவச மின்சார சட்டம் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எழுதியது வெறும் காதல் கடிதம் மட்டுமே, அந்தக் கடிதத்தை மத்திய அரசு ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. நீட் தேர்வை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டதுபோல் இந்த மின்சார திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளும்.
வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மின்சாரத் திட்டம் விவாதத்திற்கு வரும் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை எரிக்கவும் தயங்கக்கூடாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய பெரு நிறுவனம்!