விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனாவால் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்திருப்பது ஏன் என புரியவில்லை. கரோனாவுக்கும் பட்டாசு வெடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உச்ச நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியம் அனுமதி வழங்கியுள்ள ரசாயன மூலப்பொருள்களை மட்டுமே பயன்படுத்தி சிவகாசி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஊடுருவும் பட்டாசுகளில் மட்டுமே, மெர்குரி, லெட், ஆர்சனிக் உள்ளிட்ட ஆறு வகையான தடை செய்யப்பட்ட ரசாயன மூலப் பொருள்கள் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும். சிவகாசியில் தயராகும் பட்டாசுகளால் எந்தவித பாதிப்பும் இல்லை. வெளிநாட்டு பட்டாசுகளை மட்டுமே ராஜஸ்தான் அரசு தடை விதிக்க வேண்டும். சிவகாசி பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
இந்த ஆண்டு பட்டாசுக்கு தடை ஏற்படும் நிலையில், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்கான உற்பத்தியை தொடங்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.