விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம், கோவிந்தராஜ். இவர்கள் பெரியகுளம் செல்லும் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர்களது டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு கூமாப்பட்டி காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ராமலிங்கம் மகன் தனுஷ்கோடி என்பவர் விருதுநகர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது தனக்கு அவமானம் என கருதி இரவு நேரத்தில் டிராக்டரை தூக்கி சென்றுள்ளார்.
இது குறித்து கூமாப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி தான் டிராக்டரை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர், ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி மீது வழக்குப்பதிவு செய்து கூமாப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு காவலரே டிராக்டரை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.