விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் பாதுகாப்புடன் தொழில்கள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கையுடன் தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 6ஆம் தேதி முதல் படிப்படியாக பட்டாசு தொழில், அச்சகத் தொழில், ஸ்பின்னிங் மில் மற்றும் சிறு கடைகள், வணிக நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும். தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி வழங்க வேண்டும். பயணத்தின் போதும் வேலை செய்யும் இடத்திலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து, சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "சென்னையில் பால் தட்டுப்பாடு கிடையாது. நாளொன்றுக்கு 14 லட்சம் பால்பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உரிய பாதுகாப்புடன் பாலை கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு விநியோகம் செய்கின்றனர். எனவே, நோய்த் தொற்று இல்லாத சுகாதாரமான பணியாளர்களைக் கொண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையை ஆக்கிரமிக்கும் கரோனா: தலைநகரே மீண்டு வா!