விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தொகுதியிலுள்ள பல்வேறு சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு தாருங்கள் என வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அமைச்சர், "ராஜபாளையம் தொகுதி மக்கள் அளிக்கும் வரவேற்பு 1972 காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு அளித்த வரவேற்புபோல் ஆரவாரமாக உள்ளது. நான் பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்தபோது, கிராமப்புறங்களுக்கு முக்கூடல் குடிநீர் திட்டம், நகர்ப்புறங்களுக்குத் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளேன்.
விருதுநகர் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் எனப் பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளேன். 50 கோடி ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன.
நான் கொண்டுவந்த திட்டங்களை தற்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கொண்டுவந்ததுபோல பொய்யாகப் பேசிவருகிறார். ராஜபாளையம் ஒரு தொழில் நகரம். இப்பகுதியில் தொழில் வளர்ச்சியடைய பாடுபடுவேன். ராஜபாளையத்தை திருப்பூராக மாற்றிக் காட்டுவேன்.
மேலும், நான் முன்பிருந்த சிவகாசி தொகுதியில் பட்டாசு ஜிஎஸ்டி வரி 22 லிருந்து 18 ஆக குறைத்துள்ளேன். தீப்பெட்டிக்கு 18 லிருந்து 12 ஆக குறைத்துள்ளேன். நலவாரியம் அமைத்துக் கொடுத்துள்ளேன்.
கலைக்கல்லூரி, மருத்துவமனை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளேன். அதேபோல் இங்கும் வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை நான் கொண்டுவருவேன். உங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து 50 ஆயிரம் ரூபாய் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: 'உங்க பின்னாடியே வரணுமா' - கமலிடம் பெண் எழுப்பிய கேள்வி