மனிதக் குலத்திற்கு நோய் வருவது ஒன்றும் புதிதல்ல. அவை ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார் போல் வடிவம் பெற்று மக்களை துன்புறுத்தி வருகிறது. இயற்கையின் பேரழிவு போன்றே நோயின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. உலக மக்களுக்கே உயிர் பயத்தை காட்டிவரும் கரோனா தொற்றிடமிருந்து மீள, ஊரடங்கு ஒன்று தான் சரியான வழியாக உள்ளது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் ஊரடங்கு காலத்திலும் கரோனா தாக்கம் குறைந்தபாடில்லை.
கரோனா அச்சம் ஒருபக்கம் இருந்தாலும், ஊரடங்கு நீடித்து வருவதால் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் நோயை விட வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் தான் அதிகமாக உள்ளன. அந்தவகையில், வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் சிறுவன் ஒருவன் திருடனான சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகவேல். மேள கலைஞரான இவர், தற்போது உடல்நிலை சரியில்லாததால் வேலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சண்முகவேலின் மனைவி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று தன் மகன் மற்றும் கணவரை காப்பாற்றி வருகிறார். தற்போது நீடித்து வரும் ஊரடங்கால் தீப்பெட்டி தொழிற்சாலையும் இயங்காததால் வறுமையின் கொடுமையில் பசியில் வாடி வருகின்றனர்.
இந்நிலையில், சண்முகவேலின் மகன் காளீஸ்வரன் (15), குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தெருவில் கிடக்கும் பழைய பேப்பா் மற்றும் மதுபாட்டில்களை, சேர்த்து இரும்புக்கடைகளில் விற்று வந்துள்ளான். அதில் கிடைக்கும் வருமானத்தை தனது குடும்பத்திற்கு கொடுத்து உதவியாக இருந்துள்ளான். இந்த நிலையில், கரோனாவால் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், தான் சேகரிக்கும் மதுபாட்டிகள் மற்றும் பழைய பேப்பர்களை விற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குடும்ப வறுமை ஒருபக்கம் காளீஸ்வரனை நிலைகுலையச் செய்துள்ளது. இந்தச் சிறுவயதில் தனது சக்திக்கு மீறிய செயலாகவே இருந்தாலும் பசிக்கொடுமை மேலும் வாட்டியுள்ளது. இந்நிலையில், சாத்தூர் அண்ணாநகரிலுள்ள செல்வராஜ் (51) என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்புக்கடையில் 7ஆயிரம் ரூபாய் பணத்தை காளீஸ்வரன் திருடியதாக கடை உரிமையாளர் சாத்தூர் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் கடையின் CCTV காட்சிகளை வைத்து காளீஸ்வரனை கைது செய்தனர். சிறுவன் காளீஸ்வரனிடம் இது தொடர்பாக விசாரிக்கையில், குடும்ப வறுமையின் காரணமாக திருடியதாக கூறியுள்ளான். இதனையடுத்து, அச்சிறுவனை சொந்த பிணையில் சாத்தூா் நீதிமன்ற நீதிபதி விடுவிடுத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,989 பேருக்கு கரோனா