விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாசி சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் (57) என்பவருக்குச் சொந்தமான எஸ்.பி.டி. பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தப் பட்டாசு தொழிற்சாலை டிஆர்ஓ உரிமம் பெற்று 5 அறைகளில் 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சங்குச்சக்கரம் உள்ளிட்ட சிறியரக பட்டாசு வெடிகள் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று(ஏப்.4) காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி செய்ய வந்த பொழுது குடும்பன்பட்டியைச் சேர்ந்த சோலை குருசாமி என்பவரது மகன் விக்னேஸ்வரன் ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பில் மேற்கொள்ளும் போது உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமாகி இடிபாடுகளில் சிக்கி சோலை விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு அலுவலர் கதிரேசன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்த சோலை விக்னேஸ்வரனை மீட்டு உடற்கூராய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வேறு யார் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று தேடிவந்தனர். மேலும் வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கத்தாளம்பட்டி எஸ்.பி.டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் பெரியகருப்பன் (57) மற்றும் அவரது மகன்கள் ராமச்சந்திரன்(34) மணிகண்டன்(28) சிதம்பரம் (31) உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், உயிரிழப்பு ஏற்படும் வகையில் செயல்படுதல் (286, 304) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சாத்தூர் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று(மே 4) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக சிவகாசி வட்டம், கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருபத்தைந்தே வயதான திரு.சோலை விக்னேஷ், த/பெ திரு. சோலை குருசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பேரறிவாளனை விடுவிப்போம்'- உச்ச நீதிமன்றம் அதிரடி!