விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான லாரியை மதுரை சாலையில் நிறுத்தி வைத்திருந்தார்.
ஜூன் 7ஆம் தேதி காலை நிறுத்தப்பட்டிருந்த லாரி காணாமல் போனதை அறிந்து மகேஸ்வரன் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடத்தப்பட்ட லாரி பறிமுதல்
புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவலர்கள் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்திகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட லாரி வாகன எண் மாற்றப்பட்ட நிலையில் கரூர் சாலையில் சென்றபோது காவலர்கள் சுற்றி வளைத்து பறிமுதல் செய்தனர். லாரி திருட்டு சம்பந்தமாக செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் சையது அலி (43), அப்துல் காசிம் (24), முகமது நசீம் (37) உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேலும், இந்த லாரியை திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஷேக் சையது அலி என்பவரின் லாரியையும் கடத்தல்காரர்களிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.