விருதுநகர்: தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என பெயர் சூட்ட வேண்டும் என்று போராடி தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உயிர் நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார் ஆவார்.
விருதுநகரில் 1895ஆம் ஆண்டு பெரியசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியின் மகனாக பிறந்த இவர், பல்வேறு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
76 நாட்கள் உண்ணாவிரதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, சென்னை மாகாணமாக இருந்தபோது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என பெயர் சூட்ட வேண்டும் எனக்கோரி 1956ஆம் ஆண்டு ஜூலை.27ஆம் நாள் விருதுநகரில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக அவர் அக்.13ஆம் தேதி வரை தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிரை இழந்தார்.
மணிமண்டபத்தில் மரியாதை
அக்.10ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென கோரி, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அவரைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஜன.26ஆம் நாளான இன்று தியாகி சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சங்கரலிங்கனாரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் அரசு அலுவலர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள்