விழுப்புரம்: கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ( சட்டம் -ஒழுங்கு ) மீதும், அவருக்கு உறுதுணையாக இருந்ததாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கண்ணன் என்பவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் மீதான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் நேற்று (நவ-21) விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு அவர்களின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அரசுத் தரப்பு சாட்சியாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் டிஜிபி சீமா அகர்வால் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.
பெண் எஸ்பி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அப்போதைய தலைமை கூடுதல் டிஜிபியாக இருந்த சீமா அகர்வாலிடம் முதன் முதலில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையிலேயே சீமா அகர்வாலை அரசுத் தரப்பு சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது .
மேலும் இவ்வழக்கு விசாரணை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர் . புஷ்பராணி , அன்றைய தினம் காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றிய திரிபாதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:நெல்லையில் இரவு வேலைக்கு சென்ற இளைஞர் வெட்டி கொலை..