கோவிட்-19 வைரஸ் அச்சம் உலகம் முழுவதும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து மத்திய - மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 33 வாகனங்களில் 13 வட்டாரங்களில் மருத்துவக் குழுவினர் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். இந்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள உள்ள வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவக் குழுவானது 24 மணி நேரமும் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கோவிட்-19 வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் நபரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து 24 மணி நேரமும் கண்காணிக்க உள்ளனர்.
மேலும், கோவிட்-19 வைரஸ் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் மருத்துவக் குழுவினரை அணுகி அதற்குறிய தகவலைப் பெற்று பயனடையலாம். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிக்க மருத்துவக் குழு அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில் வண்டிகள் அனைத்தையும் தினம்தோறும் சுத்தம்செய்து, கிருமி நாசினி தெளித்து பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத் துறை மற்றும் ரயில் நிலைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோனா அறிகுறி!