விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு பகுதியில் தெற்கு ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் வடக்கு, தெற்கு ரயில்வே குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1926ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம் மூலம் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களில் ரயில்வே ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் குடும்பத்தோடு வாழ்ந்துவந்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பில், பெரும்பாலும் ஊழியர்கள் வசிக்காமல் பலர் வெளியே சொந்த வீடுகள் கட்டியிருந்ததால், அங்கு வெளி நபர்களை வாடகைக்கு வைத்து பணம் பார்த்து வந்தனர். இது சம்பந்தமாக ரயில்வே நிர்வாகத்துக்குப் புகார்கள் சென்ற நிலையில், அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்கள் பலருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதை நிறுத்திவைத்தனர்.
இதனால், அடுத்தடுத்து வரும் ரயில்வே ஊழியர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு வழங்காததால், ரயில்வே குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பல வீடுகள் போதிய பராமரிப்பின்றி காலப்போக்கில் பாழடைந்து போனது. அந்த இடத்தில் உள்ள தண்ணீர் மோட்டார் கொட்டகை, ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான அலுவலகக் கட்டடங்கள், பழைய லோகோ ஷெட் உள்ளிட்ட அனைத்தும் பராமரிப்பின்றி பழுதடைந்தன.
இதுபோன்ற சூழலில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, வடக்கு ரயில்வே காலனியிலுள்ள பாழடைந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதற்குத் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து, அந்தப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம், பல வீடுகளை இடித்துவிட்டு, பராமரிப்பில்லாத சில வீடுகளை அகற்றாமல் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் வடக்கு ரயில்வே காலனியில் பாழடைந்த வீடுகள், அலுவலகக் கட்டடங்களில் சமூக விரோதிகள் சிலர் வந்து தங்கும் கூடாரமாக மாறியுள்ளது.
இதேபோல் தெற்கு ரயில்வே குடியிருப்பில் தற்போது ஒரு சிலர் மட்டுமே வசித்துவருகின்றனர். பெரும்பாலானோர் ரயில்வே குடியிருப்பு இருக்கும் நிலையைக் கண்டு வெளிப்பகுதியில் வாடகைக்கு வசிக்கின்றனர். இதனால் இந்தக் குடியிருப்பிலும், பல வீடுகளில் சில நல்ல நிலையில் இருப்பதோடு, ஊழியர்களுக்கு ஒதுக்கப்படாமல் பாழடைந்துள்ளன.
இதனால் இந்தக் கட்டடங்களில் மது அருந்துதல், சூதாட்டம் ஆகியவை மட்டுமின்றி, சில சமூக விரோதச் செயல்களிலும் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அருகிலுள்ள பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் அச்சத்துடன் அந்தப் பகுதியைக் கடக்க வேண்டிய நிலையுள்ளது. இதேபோல், ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உள்ள பெண்கள் மாலை நேரங்களில் கோயில்களுக்குச் செல்லவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே ரயில்வே குடியிருப்புப் பகுதிகளில் தற்போது வசிக்கும் சில குடும்பங்கள் பாதுகாப்போடு இருப்பதற்குப் பாழடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை ரயில்வே நிர்வாகம் இடிப்பதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பல ஏக்கர் பரப்பளவிலான இடத்தை அழகாக்கி, மக்களுக்குப் பயனுள்ள வேறு கட்டடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் விருப்பமாகவுள்ளது.
இதையும் படிங்க: ஊரே ஒன்றுகூடி நிறைவேற்றிய தீர்மானம்: 'ஏனா உசுரு முக்கியம்'