சென்னை: பள்ளியின் நுழைவாயிலில் சாதிப் பெயரை எழுதலாமா? என அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இந்த சங்கம், தங்களுடைய சாதி மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது சாதி தான் முக்கியம். அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தான் சங்கத்தில் உறுப்பினராக முடியும் என்று கூறினால், இதுபோன்ற சாதி சங்கத்தை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த நாட்டில் அனைவருக்கும் சங்கத்தை உருவாக்க உரிமை உள்ளது. அதாவது குறிப்பிட்ட சாதிக்காக சங்கத்தை தொடங்கலாம். ஆனால், சாதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன், சாதியின் பெயரில் சங்கம் தொடங்க முடியுமா? என்று கேள்வி எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டியதுள்ளது.
சங்கங்களின் சட்டத்தின் படி, அறிவியல் வளர்ச்சி சமுதாய தொண்டு செய்யும் நோக்கங்களுக்காக சங்கங்களின் சட்டத்தின் படி சங்கங்களை தொடங்கலாம். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டம் சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.
அசோக்குமார் தாக்கூர் வழக்கிலும் உச்சநீதிமன்றம் அதை தான் வலியுறுத்துகிறது. எனவே, சங்க பதிவு சட்டங்களின்படி, சாதியின் பெயரில் சங்கங்கள் தொடங்க முடியுமா? அதுமட்டுமல்ல இதுபோன்ற சாதி சங்கங்கள் பள்ளி, கல்லூரி என்று கல்வி நிலையங்களை நடத்துகின்றன.
அந்த கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பள்ளி, கல்லூரிகளின் பெயரை எழுதி, இதை இந்த சாதி சங்கம் நடத்துகின்றது என்றும் எழுதி வைக்கின்றனர்.
அதாவது பள்ளிக்கூடத்துக்குள், சாதி இல்லையடி பாப்பா என்று ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுகிறார். ஆனால், பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலை என்ன? என அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.