மதுரை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒன்றை தமிழக முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட வரலாறு பாட முதுகலை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் மையத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியின் சிறப்பு:
இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வருமான முனைவர் ராமராஜ் கூறுகையில், “இப்பயிற்சியில் தமிழகத்திலுள்ள 50க்கும் முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொல்லியல்துறையின் ஆளுமைகளான முனைவர் வெ.வேதாசலம், முனைவர் வீ.செல்வகுமார், முனைவர் காந்திராஜன் ஆகியோர் பயிற்சி அளித்துள்ளனர். காலையில் பயிற்சி, பிற்பகலில் கீழடி அருங்காட்சியகம் மற்றும் அகழாய்வு நடைபெறும் இடம், நிலக்கோட்டை சித்தர் மலை, யானை மலை, அழகர்கோவில் ஆகிய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பாறை ஓவியங்கள், குகைகளில் உள்ள படுக்கைகள், தமிழி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன” என்றார்.
வகுப்பறைக்கு உயிரோட்டமாக இருக்கும்:
தொடர்ந்து பேசிய திருச்சி மாவட்டம் தொட்டியம் அரசு பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், “பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மிகவும் சிறப்பான வகையில் வழங்கப்பட்டது. முனைவர் வேதாசலம் தமிழி எழுத்துருவிலும், தமிழ் வட்டெழுத்திலும் எவ்வாறு எழுதுவது என்பது குறித்த பயிற்சியை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது பெயர்களை எழுதி மகிழ்ந்தனர். இதுகுறித்து படித்திருந்தாலும்கூட, நேரில் கண்டுணர்ந்து அறிந்து கொள்வது நல்ல அனுபவமாக இருந்தது. அதேபோன்று பாறை ஓவியங்கள் குறித்து முனைவர் காந்திராஜன் வழங்கிய பயிற்சியும் பயனுள்ளதாகும். கற்பித்த பணிக்கு இந்தப் பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும். இதுபோன்ற பல பயிற்சிகளை வழங்கினால், எங்களுடைய வகுப்பறை மிக உயிரோட்டமாக இருக்கும்” என்றார்.
மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்:
இதையடுத்து பேசிய தஞ்சை மாவட்டம் மாரியம்மன்கோவில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஹேமலதா கூறுகையில், “காலையில் பயிற்சி, பிற்பகலில் அது தொடர்பான களப்பார்வை என்பது இந்தப் பயிற்சியின் சிறப்பு. வரலாற்றுத் தொன்மை மிக்க இடங்களுக்குச் செல்லும்போது வெறும் பார்வையாளராக தமிழ் பிராமி எழுத்துக்களைப் பார்த்த எங்களுக்கு அதனை வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயிற்சியை எங்கள் மாணவர்களுக்கும் வழங்குவதன் வாயிலாக அவர்களுக்குள்ளும் தொல்லியலின் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்த பார்வையில்தான் இனி அனைத்து இடங்களையும் பார்வையிடுவோம் நான் நம்பிக்கை தெரிவிக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: "எம்.பி.க்கே இந்த நிலையா".. தமிழச்சி தங்கபாண்டியனிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா! -
ஒரு ஆசிரியருக்கு கற்றுகொடுப்பது 1000 மாணவர்களுக்கு சமம்:
இதனைத் தொடர்ந்து பயிற்றுநரும் தொல்லியல் அறிஞருமான முனைவர் வெ.வேதாசலம் கூறுகையில், “மிகுந்த ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர்கள் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கும் மூலங்களான கல்வெட்டு, தொல்லியல் தொடர்பான அறிந்து கொண்டால், கற்றலுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதியே இதுபோன்ற பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை வழங்குகிறது. மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட ஒரு ஆசிரியருக்கு சொல்லிக் கொடுத்தால், ஆயிரம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்குச் சமம். இதுபோன்ற பயிற்சிகளை தமிழ்நாடு அரசு அடிக்கடி நடத்த வேண்டும். அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளை, அகழாய்வுகளைப் பற்றியும் கற்றுத்தருவதன் வாயிலாக நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், பெருமையையும் எடுத்துக் கூறுவதற்கு அரிய வாய்ப்பாக அமையும்” என்றார்.