விழுப்புரம் மாவட்டம் கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 80), இவரும் மகள் பூங்காவனமும் (வயது 60) நேற்று முன்தினம் (டிச.7) அவர்கள் வீட்டில் ரத்தக்கறையுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இதனையடுத்து அங்குச் சென்ற கண்டமங்கலம் காவல்துறையினர், இறந்தவர்களின் உடலைக்கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் நேற்று (டிச.8) சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதில், நகைக்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இந்த தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடைய திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த கவிதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணையில் இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
முதியவர்களைக் கொலை செய்யும் மனோபாவம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நகைக்காக முதியவர்களைக் கொலை செய்யும் மனோபாவம் உள்ளவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றி உள்ளார்.
மேலும், இவர் பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் நபராகவும் காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இருவரிடம் இருந்து எட்டு கிராம் தங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்றதும் கண்டறியப்பட்டுள்ளது.
24 மணிநேரத்திற்குள் சிக்கிய குற்றவாளி
இந்த கொலை தொடர்பாக விழுப்புரம் டிஎஸ்பி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுத் தேடுதல் பணியில் ஈடுபட்டு 24 மணிநேரத்தில் குற்றவாளியை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர் என விழுப்புரம் டிஐஜி பாண்டியின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது, டிஐஜி உடன் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உடனிருந்தார்.
இதையும் படிங்க : அருப்புக்கோட்டையில் பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி மரணம்!