விழுப்புரம்: நூற்றாண்டு கடந்த சமூக சீர்திருத்த மரபினையும், முற்போக்கான பார்வை கொண்ட அரசாங்கங்கள் அமைந்த வரலாற்றையும் கொண்ட தமிழ்நாட்டில், இன்றும் சில கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள பகுதியில் இறந்தவரின் உடலை தூக்கி செல்ல பாதை இல்லாமல் மேடு, பள்ளங்களில் உடலை தூக்கி செல்லும் அவலம் அரங்கேறி உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி காந்தி நகரில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சிலர் இங்கு உள்ள மலட்டாற்றில் தொடர்ந்து திருட்டுத் தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டுவதாகவும், 5 அடிக்கு மேல் மலட்டாற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதால், ஆங்காங்கே குழிகள் நிறைய உள்ளதாகவும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இறந்தவர்களின் உடல்களை ஆற்றுப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும் போது, தவறுதலாக குழியில் விழும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டு உள்ளதாகவும் கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எடுத்து செல்லக் கூட பாதை இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மலட்டாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆற்றுப் படுகைக்கு செல்லும் வழியை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை... போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி!