விழுப்புரம் அருகே மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் - விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு! - villupuram district news in tamil
Villupuram: பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Published : Oct 1, 2023, 11:55 AM IST
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோர்களின் சார்பாக ஒருவர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
குறிப்பாக, இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத முறையில் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதை தலைமை ஆசிரியர் வாடிக்கையாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர், மூன்று தினங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் தங்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதை பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனினும், போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், பெற்றோரிடம் ஆசிரியர் மீது வழக்கு தொடர்வதால் உங்களது குழந்தையின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் எனக்கூறி புகாரைத் திரும்ப பெற வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதேபோன்று பல்வேறு மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், அங்கு பயிலும் பெண் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் தலைமை ஆசிரியர் மீது சமூக நலத்துறை மூலமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பள்ளியின் பெற்றோர் தரப்பில் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பழனி, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தாராசுரம் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியா? - திடீரென வந்த நபர்களால் பரபரப்பு!