நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பிரதமர் கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதி, மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் தனியார் கணினி மையங்கள் மூலம் முறைகேடு நடந்ததால் விவசாயிகள் அல்லாத பொதுமக்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற்றனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதைக் கண்டித்தும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்தக்கோரியும் விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஆகஸ்ட் 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்க மாவட்டச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.