விழுப்புரம்: கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உள்ள கனியாமூா் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் பள்ளி வளாகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டமானது வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வந்த நிலையில், மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீா்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனா். இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதித்துறையில் நடந்து வருகிறது. விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த நிலையில், அதில் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரது பெயர்களை வழக்கிலிருந்து நீக்கம் செய்திருந்தனர்.
இது குறித்து ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என மாணவியின் தாய்க்கு நீதிமன்றம் மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து, குற்றப்பத்திரிகை நகல் மற்றும் சில ஆவணங்களை வழங்குமாறு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாணவியின் தாய், கடந்த ஜூன் 5ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தாா். அதன் அடிப்படையில், கடந்த ஜூன் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் உள்ளிட்ட ஆவணங்கள் மாணவியின் தாயிடம் வழங்கப்பட்டன.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (அக்.17) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் தாய் தனது வழக்கறிஞர் மூலம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். இந்த மனுவில், குற்றப்பத்திரிகை தாக்கலில் விடுபட்ட ஆவணங்கள், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகள், ஜிப்மர் மருத்துவர்களின் ஆய்வறிக்கை ஆகியவற்றை தங்களிடம் வழங்குமாறு கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி புஷ்பராணி, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இணையதளம் மூலம் தீர்வுகாண புதிய திட்டம்!