விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரணாமூர் கிராமம். இங்குள்ள ஏரிக்கரை பகுதியில் 25-க்கும் மேற்பட்ட இருளர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.இந்தக் குடியிருப்பில் வசித்துவரும் சின்னசாமி-லட்சுமி தம்பதிக்கு சங்கீதா (18), அனிதா (13), கவிதா (9) என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மின்சாரம், சாலை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத சிறிய ஓலை வீடுதான் சின்னசாமியின் வீடு. வாட்டியெடுக்கும் வறுமை, இருளர் சமூகத்துக்கே உரிய பிரச்னைகள் என அனைத்தையும் கடந்து தனது மூன்று மகள்களையும் படிக்கவைத்து-வருகின்றனர் சின்னசாமி-லட்சுமி தம்பதி. சென்னையில் உள்ள செங்கல் சூளையிலிருந்து கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள்தான் சங்கீதாவின் பெற்றோர்.
இத்தனை தடைகளையும் தாண்டி படித்துவந்த சங்கீதா கடந்தாண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 263 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றார். 263 மதிப்பெண்கள் என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு குறைவானதாகத் தோன்றலாம். ஆனால், சங்கீதாவின் இந்த வெற்றி இருளில் மூழ்கியிருக்கும் அச்சமூகத்தினருக்கான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் வீரணாமூர் இருளர் குடியிருப்பில் முதல் ஆளாக 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ளோம் என்ற மகிழ்ச்சி, மறுபுறம் மேல்படிப்பு என்பது நமது சமூகத்துக்கு எட்டாக்கனியாக உள்ளதே என்ற வருத்தம்.
இந்நிலையில் சிலரின் உதவியால் செஞ்சி அருகேயுள்ள தனியார் கல்லூரியில், இளங்கலை முதலாமாண்டு செவிலியர் படிப்பு பயின்றுவருகிறார்.இதற்காக தினமும் காலை 6 மணிக்கெல்லாம் தனது வீட்டிலிருந்து கிளம்பும் சங்கீதா, செஞ்சி சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் கல்லூரி செல்கிறார்.
மேலும் அவ்வப்போது விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பயிற்சிக்காகச் சென்றுவருகிறார். இதற்காக நாள்தோறும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பேருந்து பயண செலவுக்கு தேவைப்படுவதாகவும் கூறுகிறார்.
இதனால் அரசின் இலவசப் பயண அட்டை கிடைத்தால் தனது படிப்புக்கும் மேலும் ஒரு உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அரசின் இலவசப் பேருந்து பயண தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பொருந்தாது என்ற பதிலே தனக்கு கிடைத்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார்.
இது குறித்து சங்கீதாவின் தந்தை சின்னசாமி கூறும்போது, "மரம் வெட்டும் தொழில் செய்துவரும் நான், எனக்கு வரும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு எனது மகள்கள் மூன்று பேரையும் படிக்கவைத்து-வருகிறேன். சங்கீதா பள்ளியில் பயின்றவரை எனது வருமானம் குடும்பத்துக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது கல்லூரிக்குச் சென்றுவருவதால் நாளொன்றுக்கு 150 ரூபாய் வரை தேவைப்படுகிறது.
எனது வருமானம் மற்ற இரு பிள்ளைகளின் படிப்புச் செலவு போக, சாப்பாட்டு செலவுக்கே போதுமானதாக இல்லை. இதனால் எனது மகளின் கல்வி தடைபட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தயவுகூர்ந்து எனது மகள் தினமும் கல்லூரி சென்றுவர வசதியாக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளார்.
இருளர் சமூக மக்களின் ஒளிவிளக்காய் திகழும் சங்கீதாவுக்கு பேருந்து பயண அட்டையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.