விழுப்புரம்: முந்தைய அதிமுக அரசில் தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் மீது பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கடந்த 2021 ஆண்டு மார்ச் மாதம் பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டை அடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவியதாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில், ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் பெண் எஸ்பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூன்.17) வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையில் எஸ்பியாக பணியாற்றி வரும் மகேஸ்வரன், திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளர் விதுன்குமார் ஆகிய இருவரும் நேரில் ஆஜரானார்கள்.
மேலும் காவல்துறை ஐஜி ரூபேஷ்குமார் மட்டும் ஆஜராகவில்லை.
இதனையடுத்து எஸ்பி மகேஸ்வரன், ஆய்வாளர் விதுன்குமார் ஆகியோரிடம் நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தினர். அதன் பின், வழக்கு விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... வீடியோ எடுத்து மிரட்டிய 7 பேர் கைது...