திண்டிவனம் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுவந்தன. இது குறித்து வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் காவலர்கள் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று (டிச. 30) செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல் துறையினர் நிறுத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றவர்களைச் சுற்றிவளைத்த இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (49) என்பதும் சோம்போதி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (48) என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் திண்டிவனத்தில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் 2017ஆம் ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து 18 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.