விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் நான்கு முனை சந்திப்பு முதல் பானாம்பட்டு சாலை வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாள் தோறும் சாலை விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல்கள் ஆகியவற்றால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறிய வியாபாரிகள், இந்த பணிகளை விரைந்து முடிக்கக்கோரி நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால், தொடர்ந்து கால தாமதம் ஏற்படுவதால் விழுப்புரத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, நகராட்சி, பொதுப்பணித் துறை நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு, நகராட்சி அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து நகரில் உள்ள கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.