விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் 175க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களிடத்தில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருக்ககூடாது என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 1000க்கும் மேற்பட்ட நாட்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கல்வராயன் மலை பகுதிகளில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கச்சிராயபாளையம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஆறு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு வந்து விசாரனை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் செய்தியாளார்களிடம் பேசுகையில், கல்வராயன் மலையில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தாங்கள் வைத்திருக்கும் அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கிகளை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்து விடவேண்டும் அல்லது காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். காவல் துறையினர் சோதனை நடத்தி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டால் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.