விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பகண்டை கூட்ரோடு பகுதியில் கொள்ளையர்கள் தங்களுக்கு விபத்து ஏற்பட்டதாக நடித்து உதவி செய்ய வந்த நபரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொற்பாலம்பட்டை சேர்ந்த சரவணன், ஜெகன் ஆகிய இருவரும் நேற்று மது அருந்தி விட்டு தங்கள் ஊருக்கு காட்டு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டில் விபத்து நடந்ததுபோல இருவர் கீழே விழுந்து கிடந்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய சரவணன் மற்றும் ஜெகன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். திடீரென கீழே கிடந்த இருவரும் உதவி செய்ய வந்தவர்களை கத்தியைக் காட்டி பணத்தைத் தருமாறு மிரட்டியுள்ளனர்.
அப்போது ஜெகன், தான் வைத்திருந்த 1,500 ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். சரவணன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் கொள்ளையர்கள் சரவணனை கத்தியால் குத்தினர். இதனால் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெகன் பலத்த காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழிப்பறியில் ஈடுபட்ட விஜயகுமார், கோவிந்தசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.