விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் - முத்துலட்சுமி தம்பதியினர்.இவர்களுக்கு வாணி என்ற மகளும், ஹரி, தரண் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் வேலை பார்த்து வந்த ஐயப்பனின் உறவினரான மணிகண்டன் மூலம் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி மலேசியாவில் BANDAR BARU SELAYANG எனும் பகுதியில் செயல்பட்டு வரும் RESTORAN AI-BIDAYAH எனும் விடுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்ற நாள் முதல் தினமும் தனது மனைவி, குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதையடுத்து கடைசியாக கடந்த 5ம் தேதி தனது மனைவியிடம் ஐயப்பன் பேசி உள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்தவித தகவலுமில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி அண்மையில் ஊர் திரும்பிய மணிகண்டனிடம் விசாரித்த போது, ஐயப்பன் குறித்து எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் ஐயப்பனின் மனைவி மலேசியா சென்ற தனது கணவரை பத்திரமாக மீட்டு தருமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.