விழுப்புரம்: அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில், ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 30 பேர் கடலூர் தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது.
அந்த புகாரின் பேரில் கடந்த 10-ம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடித்து துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது.
மேலும் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆசிரமத்தின் உரிமையாளர் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். வழக்கு தொடர்பாக ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆசிரமத்தில் ஆய்வு செய்த சிபிசிஐ போலீசார் மேற்கொண்டு விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் மாயமான ஜபருல்லா பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து வெளிநாடு சென்றாரா என சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஜபருல்லா குறித்து தகவல்கள் கேட்க உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஆசிரமத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடலூரில் உள்ள தனியார் காப்பக்கத்தில் சேர்ககப்படுள்ளனர். இதுவரை 23 பேர் கடலூரில் உள்ள காப்பகத்தில் அனுமதிக்கப்படுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Garib Rath Express: டெல்லி - சென்னை விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!