வறுமையால் பள்ளிக்குப் போகாமல் வயல்வெளிகளில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைத்ததுதான் மதிய உணவுத் திட்டம். இந்தியாவுக்கே முன்னோடியான இந்த மதிய உணவுத் திட்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 'மதிய உணவுத் திட்டம்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 1982ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 'சத்துணவுத் திட்டம்' என்ற தனித்துறையாகச் செயல்படத் தொடங்கியது. பின்னாளில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டத்தில் முட்டை சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியில் கலவை சாதமாக மாற்றம்செய்யப்பட்டது. தற்போதைய ஆட்சிவரை கட்சிகள் பாகுபாடின்றி இத்திட்டம் கடந்துவருகிறது.
பல லட்சம் குழந்தைகளைப் பள்ளிக்கூட வாசலை தொடவைத்த மகத்தான மதிய உணவுத் திட்டம், கடந்த 65 ஆண்டுகளாக தொய்வின்றி செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மதிய உணவு தயாரிப்பில் சத்துணவு அமைப்பாளர், சமையலர்கள், உதவியாளர் என 80 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டுவந்த மதிய உணவு தடைபட்டுள்ளது.
மதிய உணவுத் திட்டத்தின் மூலம் தனது ஒருவேளை பசியை பள்ளிகளில் போக்கிவந்த லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் தற்போது பசியால் வாடிவருகின்றனர். இதனால் தங்களது பசியைப் போக்க பள்ளிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் மாணவர்கள்.
இதையும் படிங்க...‘ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி’ - ஸ்டாலின் கண்டனம்