விழுப்புரம்: உலகம் முழுவதும் நாளை (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று, காதல் ஜோடிகள் பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்நிலையில், காதலிக்கு பரிசு வாங்கி கொடுப்பதற்காக ஆடு திருடிய இளைஞர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பீரங்கிமேடு மலையரசன் குப்பத்தை சேர்ந்தவர் ரேணுகா. வீட்டின் பின்புறம் கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று (பிப்.12) ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டதால், ரேணுகா சென்று பார்த்த போது இளைஞர்கள் இருவர் ஆட்டை திருடி, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர்.
இதைக்கண்ட ரேணுகா கூச்சலிட்டதால், அருகே இருந்தவர்கள் இளைஞர்களை சுற்றிவளைத்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் கல்லூரி மாணவர் அரவிந்த் குமார் (20), அவரது நண்பர் மோகன் (20) என்பது தெரியவந்தது. அரவிந்த் குமார் இளம்பெண்ணை காதலித்து வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு அந்த பெண்ணுக்கு பரிசு வாங்கி கொடுக்க பணம் இல்லாததால், ஆட்டை திருடி அதை விற்று கிடைக்கும் பணத்தின் மூலம் காதலிக்கு பரிசு வாங்கிக் கொடுக்க திட்டமிட்டது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாமக செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு திருடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கைதான அரவிந்த் குமார், மோகன் ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திட்டக்குடி அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!