விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் வசந்தகிருஷ்ணாபுரம். இந்தக் கிராமத்தில் உள்ள நடுத்தெருப் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவர் மதுபோதையில், தென்பெண்ணை ஆற்றில் கரும்பு விற்பனை செய்துகொண்டிருந்த, மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷிடம்(28) கரும்பு கேட்டுத் தகராறு செய்துள்ளார்.
தகராறு பின்னர் மோதலாக மாறியுள்ளது. மோதலையடுத்து அங்கிருந்து சென்ற சக்திவேல் மேலும் குடித்துள்ளார். போதையின் உச்சத்திலிருந்த சக்திவேல், கரும்பை விற்றுவிட்டு வீடு திரும்பிய ஜெயப்பிரகாஷை அவரது வீட்டிற்கு வெளியே வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு, தப்பியோட முயற்சித்துள்ளார்.
ஊர் மக்கள் சக்திவேலைப் பிடித்து தர்ம அடிகொடுத்தனர். இதனிடையே ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெயப்பிரகாஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அரகண்டநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் சிறுமி உள்பட 30 பேர் காயம்