விழுப்புரம் அருகே அரசு அனுமதியின்றி கடந்த 15 வருடங்களாக இயங்கி வந்த தனியார் ஆசிரமத்திற்கு சீல் வைத்தும், அங்கு நடத்தப்பட்ட வன்கொடுமைகள் பற்றியும் தற்போது உயர் மட்ட காவல்துறை அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் என அனைவரும் சுகாதாரமற்ற முறையில் தங்க வைக்கப்பட்டதும், மனநலம் குன்றிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியவர்களை பயமுறுத்தும் வகையில் குரங்குகளை விட்டு கடிக்க வைத்ததும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பேரில் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிரம நிர்வாகிகள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் தனியார் ஆசிரமத்தின் மற்றொரு கிளையிலிருந்து 13 பெண்கள் உட்பட 25 பேர் மீட்கப்பட்டனர். அதேபோன்று தனியார் ஆசிரம நிர்வாகி மனைவி ஜுபின் மரியா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் இன்று காலை ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபியை போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஜூபின் பேபியை கைது செய்த போது காவல் துறையினரிடம் 'அவர் என்னையே கைது செய்வீர்களா..? நான் எந்த தவறையும் செய்யவில்லை' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த 16 பேர் காணவில்லை என்ற புகார் குறித்து நேற்றைய தினம் மரியா ஜுபினிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில், காணாமல் போனதாக கூறப்பட்ட 16 நபர்களும் தங்களுடைய நண்பர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு அருகே தொட்டகுப்பி எனும் இடத்தில் நடத்திவரும் நியூ ஆர்க் மிஷன் ஆப் இந்தியா எனும் இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் செஞ்சி உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். மரியா ஜூபின் கூறிய தகவலின் அடிப்படையில் 16 பேர் அங்கே தான் இருக்கிறார்களா அல்லது அதன் உண்மை நிலையை அறிய தனிப்படை போலீசார் தற்போது பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சடலத்தை எடுத்துச்செல்ல பாதை இல்லை... சார் ஆட்சியர் தலைமையில் நாளை கூட்டம்!