விழுப்புரம்: திராவிடம் என்றால் என்னவென்றே திமுகவில் இருப்பவர்களுக்கு தெரியாது என்றும் திராவிடர்களை ஒரு போதும் நம்பாதீர்கள் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று (அக். 24) இரவு நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய சீமான், "திராவிடம் என்றால் என்னவென்றே திமுகவில் இருப்பவர்களுக்கு தெரியாது. சாதியை ஒழிப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மட்டும் தான் அனுப்பி வருகிறார். எத்தனையோ பேர் தன்னை கூட்டணிக்கு அழைத்து பெட்டி தருகிறேன் என்றார்கள்.
அதனை நான் ஏற்க மறுத்துவிட்டேன், நாலு சீட்டுக்காக கட்சியை விற்பவன் நான் இல்லை. தமிழகத்தில் இதற்கு முன்னர் அரசியலை வழிநடத்திய தலைவர்கள் போல் அல்லாமல் பிரபாகரன் மற்றும் தமிழீழத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே நாம் தமிழர் கட்சி.
நாங்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. உங்களின் வயிற்றில் இருந்து வந்தவர்கள். உங்களின் வியர்வை துளிகளை உணர்ந்து வந்தவர்கள். தனித்து ஏன் இருக்கிறாய் சீமான், என்று பலர் என்னிடம் கேட்டாலும், நான் என் மக்களை நம்புகிறேன் அதனால் தனித்து நிற்கிறேன்.
சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு, பொரியல் என்று இருப்பேன் சண்டை என்று வந்துவிட்டால் தனித்து நின்று வெல்வேன். எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள், தரமான கல்வி, தரமான குடிநீர், தரமான சுகாதாரம், தரமான மருத்துவம் கொடுப்போம். அதற்கு எனக்கு முழு அதிகாரம் தேவை.
இதையும் படிங்க: ஆயுத பூஜைக்கு சுத்தம் செய்த போது பிடிபட்ட 18 பாம்புகள்.. பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு வனத்துறை பாராட்டு!
ஈழப்போர் முடிந்து விட்டது, விழுந்து விட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். கடைசி தமிழன் உயிரோடு இருக்கும் வரை ஈழ விடுதலை போராட்டம் தொடரும். உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் தமிழன் உயிரோடு இருக்கும் வரை தமிழ் பேரினத்தின் விடுதலைக்கான புரட்சி இருக்கும்.
நீங்கள் என்னை நிராகரிக்கலாம், மறைக்கலாம். ஆனால் என்னுடைய அரசியலை நிராகரிக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. என்னுடைய அரசியல் மாறுபட்ட அரசியலாக இருக்கும். திராவிடம் என்றால் என்ன என்றே திமுகவில் இருப்பவர்களுக்கு தெரியாது.
நம் இனத்துக்கு வரலாறு என்பது கிடையாது. வரலாறு படைப்பவர்களுக்கு ஏது வரலாறு என்று பிரபாகரன் ஒருமுறை தெரிவித்தார். பல லட்சம் சொற்களை கொண்ட மொழி தான் தமிழ்மொழி. அதனை ஒழிக்க பலர் முற்படுகின்றனர். தமிழ் மொழி படித்தால் வேலை கிடைக்காது, சாப்பாடு கிடைக்காது என சொல்பவர்களைக் கண்டால் கடும் கோபம் வருகிறது.
தன்மானத்திற்காக உயிரை விட்ட இனம் தான் தமிழ் இனம். திராவிடர்கள் நம்முடனே நடந்து வருவார்கள், நம்முடன் ஓடுவார்கள், நாம் அவர்களை மான் என்று நினைத்து பயணிப்போம். பின்னர் தான் தெரியும் ஒருநாள் அவர்கள் ஓநாயாக மாறி நம் கழுத்தை கடிப்பார்கள். திராவிடர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்" என்று சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மது போதையில் பொது இடத்தில் ரகளை.. ஜெயிலர் பட வில்லன் அதிரடி கைது!