விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு சசிகலா இன்று (ஜூலை 6) சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா, "புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சித் தலைவியின் தலைமையில் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்தது.
ஒரு காலத்தில் அதிமுகவை பார்த்து பொறாமைபட்ட திமுக, இன்று நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நகைச்சுவை கொள்கிறது. புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட அதிமுக என்கிற பேரியக்கம், அவரால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போது ஆண்டுக்கு ஒரு முறை இருக்கும் சிலரால் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. துரோகம் இழைத்தவர்களுக்கு கண்டிப்பாக உரிய தண்டனை கிடைக்கும்.
தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. லாக்கப் மரணங்கள் நடக்கிறது. திமுக அரசு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதிமுகவை அழிக்க நினைக்கும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்ள கடமைப்படுகிறேன், எந்த ஒரு காலத்திலும் ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. நான் மக்களோடும் உங்களோடும் தான் இருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை - உச்ச நீதிமன்றம் உத்தரவு