விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் மீனவர் கிராமத்தில் புயல், காற்றின் திசை மாறுபடும் போதும் ஏற்படும் பேரலைகளால் தொடர்ந்து கடலரிப்பு ஏற்பட்டு பல வீடுகளும், சாலைகளும், கட்டடங்களும் கடல் பகுதிகளுக்கு உள்ளே இழுத்துச் செல்லப்பட்டன.
கிராமத்தினை கடல் அரிப்பில் இருந்து பாதுகாத்திடும் வகையில் சென்னை தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு கடலின் உள்ளே சுமார் 250 மீட்டர் தொலைவில் நீர்மூழ்கி தடுப்பணைகள் அமைக்க மீன்வளத் துறைக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு கடலோர மண்டல மேலாண்மை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டம் செயற்கை நாரிழைகளாலான ராட்சத பைகளால் செயல்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கடற்கரை மணல் பரப்பை உருவாக்கி மீனவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மீன்வள கூடுதல் இயக்குநர் சின்னகுப்பன், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.