புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல்நலக் குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை (நேற்று) அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து ஜானகிராமனின் உடல் ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து இன்று ஜானகிராமனின் உடல் அவரது சொந்த ஊரான மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூரில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு, புதுச்சேரி சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.